மீதமான அடை மாவை வைத்து இட்லி

 மீதமான அடை மாவை வைத்து இட்லி


நம்முடைய வீட்டில் அரைக்கும் அடை மாவாக இருந்தாலும் சரி, இட்லி மாவாக இருந்தாலும் சரி, சில சமயங்களில் பிரிட்ஜில் வைத்துவிட்டு, அதை சமைக்க முடியாமல் போய்விடும். Fridge வைத்திருந்தால் கூட சில சமயம் அந்த மாவு புளித்துப் போய்விடும். புளித்த அடை மாவை என்ன செய்யலாம்? ரொம்பவும் புளித்துப் போன இட்லி மாவில் என்ன செய்யலாம்? என்பதைப் பற்றிய இரண்டு சுவாரஸ்யமான டிப்ஸை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 


முதலில் புளித்த அடை மாவை எப்படி இட்லி வார்ப்பது என்று தெரிந்து கொள்வோமா? ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய வெங்காயம், கொஞ்சமாக கேரட் துருவல், கோஸ் துருவல், தேங்காய் துருவல், இவைகளை சேர்த்து இந்த கலவைக்கு தேவையான உப்பை போட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, இந்த காய் முக்கால் பாகம் வேகும் வரை வதக்க வேண்டும். இப்போது இந்த கலவை அப்படியே ஆரட்டும்.

இதற்கான அளவுகள் சொல்லப்படவில்லை என்று சிந்திக்கிறீர்களா? உங்களுடைய வீட்டில் அடை மாவு எவ்வளவு மீதம் இருக்கின்றதோ அதற்கு தகுந்தாற்போல், மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை வதக்கிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.



 இந்த கலவையை அடை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில், 1/4 ஸ்பூன் சோடா உப்பு போட்டு, கரைத்து இந்த மாவில் ஊற்றி, 5 நிமிடங்கள் கழித்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இந்த மாவை இட்லி வார்த்தால் போதும். இன்னும் ரிச்சாக வேண்டுமென்றால், இட்லி தட்டின் மேல் ஊற்றியிருக்கும் மாவில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை வைத்து அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

சுவையான சூப்பரான சாஃப்ட்டான அடை மாவு இட்லி தாயார். இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி, காரச் சட்னி எந்த சட்னி என்றாலும் வைத்து பரிமாறிக் கொள்ளுங்கள். 


இரண்டாவதாக, புளித்த இட்லி மாவில் என்ன செய்யலாம்? ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி இது. 



புளித்த இட்லி மாவில், இப்போது 1 சட்டி இட்லி ஊற்றும் அளவிற்கு மாவு இருக்கின்றது. அது புளித்து விட்டது என்றால், அதில் 1/2 கப் அளவு ரவையை கொட்டி, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, கொஞ்சமாக உப்பு சேர்த்து, கட்டி படாமல் கலந்து, 1/2 மணி நேரம் ஊற வைத்துவிட்டால் போதும். மாவில் இருக்கும் புளிப்பு பாதியாக குறைந்துவிடும். இப்போது இந்த மாவில் மொறுமொறு தோசை வார்த்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடுவார்கள். இந்த 2 டிப்ஸ் உங்களுக்கு பிடித்து இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.


Comments